ராமேசுவரம் கோயிலில் காவலாளியை தாக்கிய பக்தர்: போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை


ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் காவலாளியை தாக்கிய பக்தர் ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). இவர் குடும்பத்தினருடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இன்று காலையில் ராமநாதசுவாமி கோயிலின் வடக்கு வாசல் வழியாக நாகராஜ் குடும்பத்தினருடன் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் நீராடச் சென்றுள்ளார். அப்போது அவர்களிடம் தீர்த்த டிக்கெட் இல்லை என்பதால், கோயில் ஊழியர் ரவி (28), நாகராஜை தடுத்து நிறுத்தி உள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாக மாறியதில் நாகராஜ் கோயில் காவலாளி ரவியை தாக்கியுள்ளார். இதில் ரவிக்கு மூக்கு உடைந்து ரத்தக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த கோயில் ஊழியர் ரவிக்கு ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதனிடையே, கோயில் ஊழியரை தாக்கியது தொடர்பாக, ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் ராமேசுவரம் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, போலீஸார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x