நெல்லை மாவட்டம், திசையன்விளையில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. காதல் பிரச்னையில் இந்தக் கொலை நடந்திருப்பதாகக் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(19). சங்கனாங்குளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் முத்தையா வேலைச் செய்து வந்தார். நேற்றிரவு தனது நண்பர்களின் வீட்டிற்குச் சென்று வருவதாக சொல்லிச் சென்ற முத்தையா, நள்ளிரவைக் கடந்த நிலையிலும் வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து முத்தையாவைத் தேடி அவரது குடும்பத்தினர் சென்றனர். சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பலப் பகுதிகளிலும் கடுமையாக வெட்டப்பட்டு முத்தையா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் முத்தையாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே முத்தையாவும், அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. அந்த முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என முத்தையாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.