தென்காசி: கோழி, மீன் கழிவுக்குள் வைத்து கேரளத்திற்கு 15 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்ல முயன்ற நிலையில், தென்காசியில் போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகிறது. போலீஸார் வாகன சோதனை நடத்தி, ரேஷன் அரிசியைக் கடத்தி செல்பவர்களை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனங்களில் மறைத்து வைத்து கடத்திச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இந்நிலையில், தென்காசி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தென்காசி ஆசாத் நகரில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர். போலீஸாரை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டார்.
அந்த லாரியை சோதனையிட்டதில், அதில் கோழி, மீன் கழிவு உர மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து 375 மூட்டைகளில் 15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.