பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய ராணுவ வீரருக்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேசத்தின் வடக்கு எல்லையில், சீன ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறல் மேற்கொள்வதன் பின்னணி தொடர்பாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்திய ராணுவத்திலிருந்து சில கருப்பாடுகள் தெரிவிக்கும் உளவு தகவல்கள், பாகிஸ்தான் வாயிலாக சீனாவுக்குச் செல்வதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இந்திய ராணுவத்தின் பல்வேறு மட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் இந்திய ராணுவ முகாமில் சலவை உதவியாளராக பணியாற்றிய ஜவான் ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில் உளவு பின்னணி வெளிப்பட்டது.
இந்திய - சீன சர்வதேச எல்லையை ஒட்டி இந்திய படையணிகளின் முகாம் நிலவரம் குறித்து, இந்த ராணுவ வீரர் தானறிந்த தகவல்களை அபித் ஹூசைன் (எ) நாய்க் அபித் என்ற பாகிஸ்தான் உளவாளிக்கு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் வாயிலாக பாகிஸ்தான் சென்ற இந்த உளவு தகவல்கள், அங்கிருந்து சீனாவுக்கு பரிமாறப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ராணுவ வீரருக்கு எதிரான ராணுவ நீதிமன்றத்தின் விசாரணை தொடங்கியது. பெண் உயரதிகாரி ஒருவர் மேற்கொண்ட விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, உளவு பார்த்த இந்திய ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.