வால்பாறை: வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில், வெளியூரை சேர்ந்த மாணவிகள் பலர் விடுதியில் தங்கி, படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக் கல்லூரிக்குச் சென்றனர். அப்போது மாணவிகளிடம் "ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா, படிக்கும் இடத்தில் தொந்தரவு உள்ளதா?" என்று கேட்டனர்.
அப்போது 7 மாணவிகள், அந்தக் கல்லூரியில் பணியாற்றி வரும் தற்காலிகப் பேராசிரியர்கள் சதீஷ்குமார் (39), ராஜாபாண்டியன் (35), முரளிராஜ் (33), ஆய்வுக்கூட உதவியாளர் அன்பரசன் (37) ஆகியோர் ஆபாசமாகப் பேசுவது, செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என்று தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாகப் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வால்பாறை காவல் நிலையத்தில் ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் புகார் அளித்தனர். வால்பாறை அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தியதில், தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுக்கூட உதவியாளர் ஆகியோர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பாலியல் புகார்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.