கோவையில் மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறி: 3 பேர் கைது


கீழே விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்ட கண்ணன்

கோவை: கோவை அருகே மாணவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்த 14 வயதுடைய 9ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், கடந்த 29ம் தேதி வழக்கம் போல் மாலை வீட்டருகே டியூஷனுக்குச் சென்றுள்ளார். டியூஷன் முடித்து வீட்டுக்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது, வழியில் மூன்று மர்ம நபர்கள், மாணவரை வழிமறித்துள்ளனர். அப்போது, மாணவர் வைத்திருந்த செல்போனை பறிக்க மூவரும் முயன்றுள்ளனர்.

ஆனால், மாணவர் செல்போனை தராததால், அந்த நபர்கள் கத்தியால் மாணவரின் தலையில் குத்திவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த மாணவரை அவரது தந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சூலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பாப்பம்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் (19), தமிழ்செல்வன் (22), கண்ணன் (22) ஆகியோர் எனத் தெரிந்தது. இவர்களை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், பாப்பம்பட்டியில் பதுங்கியிருந்த ஐயப்பனையும் தமிழ் செல்வனையும் கடந்த 31ம் தேதி போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கண்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், கலங்கல் - கண்ணம்பாளையம் சாலையில் பதுங்கியிருந்த கண்ணனை போலீஸார் நேற்று (செப்.1) கைது செய்யச் சென்றனர். அப்போது, கண்ணன் அருகே இருந்த பள்ளத்தில் குதித்து போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்படி கீழே குதித்ததில் காயமடைந்த கண்ணனின் இடது கை முறிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் கண்ணனை கைது செய்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கண்ணன் மீது முன்னரே சூலூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x