நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது... “குழந்தைகள் நமது எதிர்கால இந்தியாவின் வாரிசுகள். குழந்தைகள் நல்ல சூழலில், நல்ல ஆரோக்கியத்தோடும், கல்வியறிவோடும் வளர வேண்டும். அப்போதுதான் எதிர்கால இந்தியா அறிவாற்றல் மிக்கதாகவும் வளமாகவும் இருக்கும்.
நாட்டில் 2018-2022ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் 2,75,125 குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2,12,825 போ் சிறுமிகள்.
இதே காலகட்டத்தில், ஏற்கெனவே காணாமல் போனவா்கள் உள்பட 2,40,502 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா். அவா்களில், 1,73,786 போ் சிறுமிகள். மேலும், இவ்வாறு காணாமல் போகும் குழந்தைகள் குறித்து புகாா் தெரிவித்து கண்டறிய வசதியாக ‘டிராக் சைல்டு வலைதளம்’ என்ற பிரத்யேக வலைதளம் ஒன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப எல்லா தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”
இவ்வாறு ஸ்மிருதி இரானி பேசினார்.