மனைவியை அழைப்பதற்காக மாமியார் வீடு சென்றவருக்கு அதிர்ச்சி; பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பகீர் குடும்பம்!


உயிரோடு கொளுத்திய குடும்பம்

மனைவியை அழைத்துவர மாமியார் வீட்டுக்குச் சென்ற நபரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தியவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆக்ராவின் தேவரி பாகியா பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. வீட்டில் செல்லமாக வளர்ந்த ப்ரீத்திக்கும், தர்மேந்திரா என்பவருக்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது. அப்போது முதல் அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிடுவதும், அங்கே மாதக்கணக்கில் தங்கிவிடுவதுமாக ப்ரீத்தி தொடர்ந்துள்ளார்.

மனைவி தாய் வீடு செல்லும்போதெல்லாம் தர்மேந்திராவும் சளைக்காது மாமியார் வீடு சென்று, பேச்சுவார்த்தை நடத்தி ப்ரீத்தியை மீட்டு வருவார். அப்படியான அண்மை படலத்தின்போது மாமியார் வீட்டில் மருமகனுக்கு பெட்ரோல் அபிஷேகம் நடத்தி, உயிரோடு கொளுத்த முயன்றிருக்கின்றனர்.

மூன்று மாதங்களுக்குப் முன்னர் தாய் வீடு சென்ற ப்ரீத்தி திரும்பாததால், அவரை மீட்டு வர வழக்கம்போல தர்மேந்திராவும் அங்கே சென்றிருந்தார். அங்கே வழக்கம்போல தொடங்கிய பேச்சுவார்த்தை, வழக்கத்துக்கு மாறாக காரசாரமானது. வாக்குவாதத்தின் உச்சத்தில் தர்மேந்திரா மீது பெட்ரோலை வார்த்த மாமியர் குடும்பத்தினர், அவருக்கு உயிரோடு தீ மூட்டினர்.

தர்மேந்திராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தீப்பொருள் பெட்ரோல் என்பதால், தர்மேந்திராவின் தேகத்தில் பெரும்பகுதியை எரித்திருந்தது. தற்போது தர்மேந்திரா கவலைக்கிடமான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தர்மேந்திராவின் சகோதரர் லோகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், ப்ரீத்தியின் தாய் ஷில்பா, சகோதரர் அஜய் சிங் உள்ளிட்டோரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x