ஆக்ராவில் தங்கும் விடுதியின் பெண் பணியாளர் ஒருவரை, அவரது ஆண் நண்பர் உள்ளிட்ட சிலர் வலுக்கட்டாயமாக மதுவை புகட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. ஆக்ரா நகரின் தங்கும் விடுதி ஒன்றில் கடந்த ஒன்றரை வருடங்களாக பெண் ஒருவர் பணியாற்றி வந்திருக்கிறார். திடீரென இவர் மீது பாலியல் பலாத்காரம் தொடுக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனைக் காணும் மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
அந்த வீடியோவில் அப்பெண்ணை ஆண் ஒருவர் தாக்கி, விடுதி அறைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார். அப்போது அந்தப் பெண் ‘என்னை விட்டுவிடுங்கள்... நான் 2 குழந்தைகளின் தாய்..” என்று கதறி உதவி கேட்கிறார். வேடிக்கை பார்க்கும் எவரும் உதவ முன்வருவதாக தெரியவில்லை. அறைக்கு இழுத்துச்செய்யப்படும் பெண் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகும்போது அந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், ஆக்ரா போலீஸார் விரைந்து சென்று அந்தப் பெண்ணை மீட்டனர். போலீஸ் விசாரணையில், பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர், மேலும் சில ஆண்களின் உதவியோடு வலுக்கட்டாயமாக தனக்கு மதுவைப் புகட்டியதாகவும், பின்னர் அடித்து விடுதி அறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மது பாட்டிலால் தலையில் தாக்கியது உட்பட தன்னை பலவகையிலும் அடித்து சித்ரவதை செய்ததாகவும் தனது புகாரில் அப்பெண் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, பெண்ணை தாக்கியது, சித்ரவதை செய்தது மற்றும் கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆக்ரா போலீஸார், ஒரு பெண் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!