திருட்டுப் புகாரில் இரண்டு பெண்களை அடித்து அரை நிர்வாணமாக அழைத்துச்செல்லும் வீடியோ; மேற்கு வங்கத்தில் திகில்


தாக்குதல்

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இரண்டு பெண்களை அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. திருட்டு சந்தேகத்தின் பேரில் தனது தாயையும், அத்தையையும் தாக்கியதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் மால்டாவைச் சேர்ந்த இளம்பெண், திருட்டு சந்தேகத்தில் தனது தாயையும், அத்தையையும் தாக்கி அரை நிர்வாணமாக அழைத்துச்சென்றதாகவும், அவர்கள் இப்போது சிறையில் இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய அப்பெண், “செவ்வாய் கிழமை (ஜூலை 18) எலுமிச்சம்பழம் விற்க என் அம்மாவும் அத்தையும் சந்தைக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒரு இனிப்பு கடை உரிமையாளர் எலுமிச்சை பழங்களை அவர்கள் திருடியதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு அம்மாவையும், அத்தையையும் எல்லாரும் பிடித்து அடித்தனர். அவர்களுடைய ஆடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக்கினர்,இது அநியாயம்” என்று கூறினார்.

மேலும், “இப்போது என் அம்மாவும் அத்தையும் மால்டாவில் சிறையில் இருக்கிறார்கள். தன்னார்வத் தொண்டர் மூலம் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அவர்கள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது ”என்று தெரிவித்தார்

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவம் மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு நடந்தது. மால்டாவின் பகுவாஹாட்டில் உள்ள உள்ளூர் மக்கள் திருட்டு சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்களை பல பெண்கள் தாக்குவதை வீடியோ காட்டுகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க காவல்துறையிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.

x