பீகார் மாநிலம் ஔரங்கபாத் மாவட்டத்தில் அனுமார் கோயிலுக்குள் மாட்டுக்கறி கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக பதற்றம் சூழ்ந்துள்ளது. இருதரப்பினர் இடையிலான மோதலை தவிர்க்க சம்பவ இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
ஔரங்காபாத் மாவட்டத்தின் ஹஸ்புரா அருகே உள்ள பாலாபிகா என்ற இடத்தில் அமைந்துள்ள அனுமார் கோயிலில் இன்று காலை இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீஸ் படை அங்கே குவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் வீசப்பட்டிருந்த மாட்டுக்கறி அகற்றப்பட்டதுடன், வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியின் வாழும் இருதரப்பு மக்கள் மத்தியிலான சமூக இணக்கத்தை குலைக்கும் நோக்கோடு, சமூக விரோதிகள் சிலர் அனுமார் கோயிலுக்குள் மாட்டுக்கறியை வீசியெறிந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில், அப்பகுதியின் சிசிடிவி பதிவுகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்ளூர் பொதுமக்களின் பிரதிநிதிகளை போலீஸ் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கே அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கே பலப்படுத்தப்பட்டுள்ளன.