26 மணி நேரம் அச்சுறுத்தல்! வனத்துறையிடம் சிக்காமல் தப்பியது சிறுத்தை; வெளியானது வீடியோ


குன்னூரில் 26 மணி நேரமாக அச்சுறுத்திய சிறுத்தை வெளியேறியது

குன்னூரில் 7 பேரை கடித்து காயப்படுத்தி, அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த சிறுத்தை, 26 மணி நேரத்திற்கு பிறகு குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள், குடியிருப்பு பகுதிகளின் அருகில் அடிக்கடி சுற்றித்திரிந்து வருகின்றன. அவ்வப்போது கால்நடைகள், கோழிகள், தெருநாய்கள் ஆகியவற்றை சிறுத்தைகள் வேட்டையாடி செல்வதால் பொது மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

குன்னூரில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வெளியேறியது!

இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள ப்ரூக்லேண்ட் பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், மிரண்ட சிறுத்தை, கட்டுமான பணியில் இருந்த வீடு ஒன்றிற்குள் பதுங்கியது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக சென்ற தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் உட்பட 7 பேர் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர்.

தற்போது 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடைய குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை எங்கு உள்ளது என்பதை கண்டறிய வனத்துறையினர் மேற்கொண்டு முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

வனத்துறை அமைத்த சிசிடிவியில் சிறுத்தை வெளியேறியது பதிவானது

சிறுத்தையை கண்காணிப்பதற்காக குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்த 26 மணி நேரத்திற்கு பிறகு, இன்று அதிகாலை அங்கிருந்து வெளியேறிய காட்சிகள் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடைசி வரை வனத்துறையினரிடம் சிக்காமல் வெளியேறிய சிறுத்தை

இதனை உறுதி செய்துள்ள வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறுத்தை வெளியேறியுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

x