திருச்சியில் புரசு மரங்களை வெட்டிய 2 பேர் கைது: அம்பர்கிரிஸ் வைத்திருந்தவரும் சிக்கினார்


மணப்பாறை பொய்கை மலை காப்புக்காட்டில் புரசு மரங்களை வெட்டியதாகவும், அம்பர்கிரிஸ் வைத்திரந்ததாகவும் மணப்பாறை வனத்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்.

திருச்சி: திருச்சியில் புரசு மரங்களை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அம்பர்கிரிஸ் வைத்திருந்த சேசலூரைச் சேர்ந்த தேக்கமலை என்பவரும் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்ட மணப்பாறை வனச்சரகத்துக்குட்பட்ட பொய்கை மலை அரசு பாதுகாப்புக் காப்புக்காட்டில் உள்ள புரசு (மம்மரம்) மரங்கள் வெட்டப்படுவுதாக திருச்சி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா மற்றும் உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில், மணப்பாறை வனச்சர அலுவலர் தலைமையிலான குழு, பொய்கை மலை அரசு பாதுகாப்பு காட்டில் புரசு(மம்மரம்) மரங்களை நேற்று (ஆக.31) வெட்டி கொண்டிருந்த புத்தாநத்தம் கிராமம் வடக்கு இடையப்பட்டிபட்டியை சேர்ந்த முனியப்பன் (28) மற்றும் குமாரவாடி கிராமம் சேசலூரை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

வெட்டப்பட்ட மம்மரத் துண்டுகளை கைப்பற்றி விசாரித்த போது இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக வனத்துறைக்கு சொந்தமான செம்மலை, காடபிச்சாம்பட்டி மலை, மருங்காபுரி மலை ஆகிய மலைப்பகுதிகளில் மம்மரத்தினை வெட்டி விற்பது கண்டறியப்பட்டது. மம்மரமானது மண் வெட்டி, கோடாரி, வேர்வெட்டி போன்றவற்றிற்கு கைப்பிடி செய்ய பயன்படுகிறது.

மேலும் முனியப்பனை விசாரணை செய்ததில் 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அம்பர்கிரிஸ் (திமிங்கலத்தின் வாந்தி) எனும் பொருளை குமாரவாடி கிராமம் சேசலூரை சேர்ந்த தேக்கமலை என்பவரிடம் விற்றதாக கூறினார்.

இதனடிப்படையில் தேக்கமலை என்பவரின் வீட்டை சோதனை செய்ததில் அங்கு அம்பர்கிரிஸ் மற்றும் சில வனப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இந்த அம்பர்கிரிஸை வைத்திருப்பது வன உயிரின சட்டப்படி குற்றம் ஆகும். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

x