திருத்தணி: திருத்தணி நகை அடகு கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த முதியவரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, சுமார் 5.5 பவுன் தங்க நகை (ஐந்தரை பவுன்), 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.68 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவள்ளி (49). இவர் திருத்தணி என்.எஸ்.சி. போஸ் சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார் ஸ்ரீவள்ளியின் கணவர் சண்முகம்.
தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் சண்முகம் கடையை திறக்க வந்தபோது, மர்ம நபரால் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்து, சுமார் 5.5 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.68 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, திருத்தணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரித்தும், நகை அடகு கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான தனிப்படை போலீஸார், நகை அடகு கடையில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இன்று சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்த முருகன் என்கிற நொண்டி முருகன் (61) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, அடகு கடையில் திருடப்பட்ட சுமார் 5.5 பவுன் தங்க நகை,சுமார் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.68 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முருகனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ’’பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முருகன், ரயில்வே டிராக் ஓரம் உள்ள நகை கடை மற்றும் அடகு கடைகளில், திருடுவது வழக்கம் என்பதும், ரயில் செல்லும் நேரத்தில் கடைகளின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்காது என்பதால், அந்த நேரத்தில் பூட்டை உடைத்து திருடுவது வழக்கம் என்பதும் தெரிய வந்தது.