மடத்துக்குளம் பெண் கொலை வழக்கு: பேருந்து ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது


மடத்துக்குளம்: மடத்துக்குளத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வழக்கில் தனியார் பேருந்து ஓட்டுநருடன் அவரது கள்ளக் காதலி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

உடுமலை, மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் பேரூராட்சியைச் சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாரதா (29). கடந்த மாதம் 25-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றின் ராஜவாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மடத்துக்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தொடக்கம் முதலே பல்வேறு குழப்பங்களும், மர்மங்களும் நிலவியதால் குற்றவாளிகளை உறுதி செய்வதில் போலீஸார் குழப்பம் அடைந்தனர். ஒரு வாரம் கடந்த நிலையில் குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ''குமரலிங்கம் மேட்டு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சாரதாவுக்கும், கொழுமத்தைச் நாகமுத்து என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இது தெரியவந்த நிலையில் சாரதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் கடந்த ஆக 24-ம் தேதி கையும் களவுமாக பிடித்து இருவரையும் அடித்துள்ளனர். அடி வாங்கிய சாரதா வீட்டை விட்டு தப்பி அவரது தோழி லட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து தான் மதுரைக்கு செல்ல வேண்டும் என கூறி அதற்கு உதவி செய்ய கேட்டுள்ளார். இத்தகவலை லட்சுமி தனது கள்ளக் காதலன் பாண்டித்துரைக்கு தெரிவித்துள்ளார். பாண்டித்துரை தனது இருசக்கர வாகனத்தில் மடத்துக்குளம் வந்து புதிய பைபாஸ் சாலை வழியாக சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் தனியாக இருந்துள்ளனர். பாண்டித்துரை சாரதாவை கட்டாயப்படுத்தி தகாத உறவு கொண்டுள்ளார்.

இந்த விசயத்தை சாரதா வெளியில் சொல்லிவிட கூடாது என்பதற்காக கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, கை, கால்களை கட்டி ராஜவாய்க்காலில் வீசி சென்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தனியார் பேருந்தின் ஓட்டுநராக இருந்த பாண்டித்துரை (27) அவரது கள்ளக்காதலி லட்சுமி (32) ஆகிய இருவரும் கைது செயப்பட்டு, மடத்துக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்'' இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

x