யானை தாக்கியதில் முதியவர் பலி! கேரளாவில் அதிர்ச்சி


கேரளாவில் யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு (கோப்பு படம்)

கேரள மாநிலத்தில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 70 வயது முதியவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளின் அருகில் சுற்றித் திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக காட்டு யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக இந்த பகுதியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜப்பன் என்ற 70 வயது முதியவர் தனது மகளை பார்ப்பதற்காக அட்டப்பாடி சென்றிருந்தார்.

கேரளாவில் யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு (கோப்பு படம்)

நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள சிறிய குடில் பகுதியில் ராஜப்பன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று, எதிர்பாராத விதமாக ராஜப்பனை தாக்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜப்பன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் ராஜப்பனின் உடலை மீட்டு, பிரேத சோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேரளாவில் யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு (கோப்பு படம்)

இதனிடையே அட்டப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை யானைகள் தாக்கியதில் இதே பகுதியில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

x