யூடியூபில் சீமான் குறித்து அவதூறு: நாதக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


சென்னை: யூ-டியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாதக மத்திய சென்னை மண்டல செயலாளர் ஸ்ரீதர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தனியார் யூ-டியூப் சேனல் ஒன்றில் கடந்த 25-ம் தேதி ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் - நாகை திருவள்ளுவன்’ என்ற தலைப்பில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பேட்டி எடுத்த நெறியாளரும், பேட்டி கொடுத்த நபரும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர்கள், நாகை திருவள்ளுவனை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பது போலவும், அதற்கான வாட்ஸ்-அப் உரையாடல்கள் இருப்பதாகவும் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

உண்மையில் அப்படி எந்த ஒரு நிகழ்வும் இல்லாத நிலையில், போலியான உரையாடல்களை தயாரித்து காட்டி, நாதக கட்சி மீதும், சீமான் மீதும் மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு யூ-டியூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இது போன்ற அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான காணொலியை யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

x