தனது 3 வயது மகனைக் கொல்ல கூலிக்கு ஆள் அமர்த்த முயன்ற தாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
கூலிக்கு பணியாட்களைத் தேடித் தரும் இணையதளங்கள் போல, கூலிக்கு கொலை செய்யும் நபர்களை வழங்கும் தளங்களும் இணையத்தின் நிழலாக இயங்கி வருகின்றன. ராபர்ட் இன்ஸ் என்பவரும் அதைப் போன்ற இணையதளம் ஒன்றை நடத்தி வந்தார். மேம்போக்கில் கூலிக்கு அடியாட்களை ஏற்பாடு செய்து தரும் தளமாக காட்சியளித்தாலும், நிஜத்தில் சமூகத்தின் அம்மாதிரியான போக்கினை கேலி செய்யும் வகையிலான பகடி தளமாக அது இயங்கி வந்தது.
அந்த தளத்தின் வழக்கமான பயனர்களுக்கும் அது தெரியும் என்பதால், வழக்கம்போல விளையாட்டு போக்கிலே hitmanforhire.com என்ற அந்த தளம் இயங்கி வந்தது. அண்மையில் இளம்தாய் ஒருவர் அந்த தளத்தை அணுகி ’ஒப்பந்த கொலைகாரன் கிடைக்குமா?’ என வினவியிருக்கிறார். வழக்கம்போல எவரோ விளையாடுகின்றனர் என எண்ணி, தளத்தை நடத்தும் ராபர்ட்டும் விளையாட்டாய் பதிலளித்திருக்கிறார். ஆனால் மறுமுனையில் விபரீதம் காத்திருந்தது.
அந்தப் பெண் ஓர் இளம்தாய் என்றும், தனது 3 வயது மகனைக் கொல்ல வேண்டும் என்றும் தெரிவித்ததோடு மகனின் புகைப்படங்கள் மற்றும் அவன் அன்றாடம் வெளியே புழங்கும் இடங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்ப ஆரம்பித்தார். வெலவெலத்துப் போன ராபர்ட், அந்த உரையாடல் அத்தனையும் காவல்துறைக்குபகிர்ந்தார்.
பின்னர் காவல்துறை கொடுத்த ஐடியா அடிப்படையில், காவல் அதிகாரி ஒருவரை கூலிக்கு கொலை செய்யும் நபர் என அந்த பெண் வசம் அறிமுகம் செய்வித்தார். அந்த காவல் அதிகாரியும், ஒப்பந்த கொலைகாரனாக தன்னை அறிமுகம் செய்துகொண்டு, ஜாஸ்மின் பயஸை தொடர்பு கொண்டார். பின்னர் நேரில் சந்தித்தவரை 3000 அமெரிக்க டாலருக்கு பேரம் பேசி ஜாஸ்மின் சம்மதிக்க வைத்தார்.
இத்தனை சாட்சியங்களை சேகரித்த பிறகு ஜாஸ்மினை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். அவரது 3 வயது மகன் தற்போது உறவினர் வசம் பாதுகாப்பாக உள்ளான். பெற்ற தாயே மகனை கொல்ல முயன்றது உட்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்களில், சிறுவனின் எதிர்காலம் கருதி காவல்துறை ரகசியம் காக்கிறது.