கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் தண்டனை உறுதி


மதுரை: கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் 2018-ல் தேசிய கபடிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்க வந்த பட்டியலின மாணவிக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வி்ல் தமிழ்ச்செல்வன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்மீதான தண்டனையை உறுதி செய்தார்.

நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு, விளையாட்டில் சாதனை புரியவேண்டும் என்ற லட்சியம் ஆகியவை அழிந்துவிட்டதைக் கருத்தில்கொண்டு, அவருக்கு மாவட்ட நீதிமன்றம் இழப்பீடாக வழங்கிய ரூ.50,000-ஐ உயர்த்தி, ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும்.

குரு, தந்தை ஸ்தானத்தில் உள்ளஆசிரியர், தன்னிடம் பயிலும் மாணவியை பாலியல் தொந்தரவுசெய்தது கண்டிக்கத்தக்கது. விளையாட்டுத் துறையில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகாமல் இருக்க, தமிழக அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை அரசு செலவில் அழைத்துத் செல்லவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

x