அநேகர் அன்றாடம் பயன்படுத்தும் ’ட்ரெட்மில்’ எனப்படும் நடைப்பயிற்சி எந்திரத்திலும் மின்சாரம் பாயுமா என்ற கேள்விக்கு டெல்லியில் நடைபெற்றிருக்கும் ஓர் உயிர்ப்பலி சம்பவம் பதில் தந்திருக்கிறது.
வடக்கு டெல்லியின் ரோகிணி பகுதியை சேர்ந்தவர் சக்ஷம் புருதி. 24 வயதாகும் பிடெக் பட்டதாரியான இவர் வழக்கம்போல காலையில் எழுந்ததும், அருகில் செயல்படும் ’ஜிம் ப்ளெக்ஸ்’ என்ற உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றிருக்கிறார்.
அங்கு சற்று நேரம் ட்ரெட்மில்லில் ஏறி ஓடியும், நடந்தும் உடற்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். பின்னர் அந்த ட்ரெட்மில் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, ஓய்வுக்காக சற்று நேரம் அதிலேயே அமர்ந்து இளைப்பாறி இருக்கிறார். அப்போது சக்ஷம் திடீரென நிலைகுலைந்து விழுந்திருக்கிறார்.
உடனடியாக அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்தவர்கள், ஏற்கனவே இறந்திருப்பதாக உறுதி செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், உடற்பயிற்சிக் கூடத்தில் அதீத உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் சந்திக்கும் மாரடைப்புக்கு, சக்ஷம் ஆளாகியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்தனர். மேலும் அந்த ஐயத்தை உறுதிபடுத்த போஸ்ட்மார்டம் அறிக்கைக்கு காத்திருந்தனர்.
ஆனால், போஸ்ட்மார்டம் அறிக்கையின் முடிவு, சக்ஷம் மின்சாரம் தாக்கி இறந்திருப்பதாக தெரிவித்தது. போலீஸார் மேற்கொண்ட ஆய்வில், அவர் பயன்படுத்திய ட்ரெட்மில் அவ்வப்போது ஷாக் அடிப்பது உறுதியானது. இதனையடுத்து, உடற்பயிற்சிக் கூடத்தில் மின்சாரத்தால் இயங்கும் உபகரணங்களை ஒழுங்காக பராமரிக்காது அலட்சியமாக இருந்ததாக, உயற்பயிற்சிக் கூட உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.