‘மணிப்பூர் வீடியோ; பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை’ மாநில முதல்வர் உறுதி


மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்

மணிப்பூர் பாலியல் வன்முறை வீடியோ தேசத்தை உலுக்கி வருவதன் மத்தியில், மாநில முதல்வரான பைரேன் சிங் ‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் இனக்கலவரத்தின் மத்தியில் அரங்கேறும் அவலங்கள் பலவும் புகைப்படம் மற்றும் காணொலிகளாக வெளியாகி வருகின்றன. சூறையாடல், பொதுச்சொத்துகளுக்கு நாசம், கொலை என வன்முறை நிகழ்வுகளாக அவை அமைந்திருக்கின்றன. அவற்றினிடையே, மணிப்பூர் பாலியல் வன்முறையை அம்பலப்படுத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகி கடந்த 2 தினங்களாக இந்தியாவை கொதிக்கச் செய்திருக்கிறது.

மணிப்பூர் விவகாரம் குறித்து இதுவரை வாய் திறக்காதிருந்த பிரதமர் மோடி கூட சீற்றம் காட்டியிருக்கிறார். குஷ்பூ முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு கொண்டு செல்வதாக விரியும் அந்த வீடியோ, சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவும் செய்திருக்கிறது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்துவரும் எதிர்க்கட்சிகள், இம்முறையும் மாநில முதல்வர் பைரேன் சிங் ராஜினாமாவையும், அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சியையும் கோரி இருக்கின்றன. இதனிடையே, முதல்வர் பைரேன் சிங் வெளியிட்ட செய்தியில், “ நேற்றைய தினம் வெளியான துயரமான காணொலியின் 2 பெண்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி, இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டதுடன், முழுமையான விசாரணையும் தொடர்ந்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர், முதல்வரைத் தொடர்ந்து பாஜகவினர் பலரும் மணிப்பூர் வன்முறை நிகழ்வுகளுக்கு எதிராக வாய் திறக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

x