மணிப்பூரின் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஆண்கள் கூட்டம் நிர்வாண ஊர்வலமாக அழைத்துச் செல்லும் கொடூரமான வீடியோ, வைரலாக பரவி நாடு முழுவதும் சீற்றத்தை தூண்டியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசாங்கம் ட்விட்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி பெரும்பான்மையான மேதி சமூக மக்களுக்கும், மலைப்பகுதிகளில் பெரும்பான்மையான குக்கி பழங்குடியினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. மேதி சமூகத்துக்கு பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) அந்தஸ்து வழங்குவதற்கு பழங்குடியின அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வன்முறை வடித்தது.
இதனைத் தொடர்ந்து மே 4ம் தேதி சுமார் 800 முதல் 1,000 பேர் ஆயுதங்களை ஏந்தியபடி பி. பைனோம் கிராமத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியும் சூறையாடியும் வீடுகளை எரித்தனர். அவர்கள் மேதி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அப்போது கிராமவாசிகள் இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் காட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களைக் கடத்திச் சென்ற அந்த கும்பல் ஒருவரை உடனடியாக கொன்றது. அதன்பின்னர் மூன்று பெண்களையும் அவர்களின் ஆடைகளையும் கழற்றுமாறு கட்டாயப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவர்களில் 19 வயது பெண்ணை அந்த கும்பல் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அதனை தடுக்க முயன்ற அவரது சகோதரர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பகிரப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்த கொடூரமான வீடியோவில், இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து அழைத்துச் செல்லும் ஒரு குழு அவர்களை வயல்வெளிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாத "சட்டம் மற்றும் ஒழுங்கில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய" வீடியோக்கள் பரவுவது தொடர்பாக ட்விட்டருக்கு எதிராக மத்திய அரசாங்கம் செயல்பட வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ட்விட்டர் சமூக ஊடகத் தளத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவு நேற்றிரவு வெளியிடப்பட்டது, அந்த வீடியோ மேலும் பரப்பப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்பட்டு வருவதாக ஆதாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன.