காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி ஒருவர் டாஸ்மாக் மதுபானக் கடையில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கினார். அவரை போலீஸார் இன்று (ஆகஸ்ட் 31) கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் உள்ள அரசு மதுக்கடையில் கடந்த மார்ச் 1-ம் தேதி நள்ளிரவு சுவற்றில் ஓட்டை போட்டு 107 அட்டை பெட்டிகளில் ரூ.8.62 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக மதுபான கடை மேற்பார்வையாளர் தயாளன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 11-ம் தேதி சுபாஷ், விக்னேஷ், மார்ச் 13-ம் தேதி கார்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட பாலூர் அருகே உள்ள கடுகுப்பட்டு மோகன்குமார் (44) என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவரை அவரது கிராமத்தில் கைது செய்தனர்.
போலீஸார் விசாரணையில் அவர் ஏற்கெனவே சட்ராஸ் காவல் நிலைய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்பதும், கடந்த 2009-ம் ஆண்டு 3 நாட்கள் பரோல் விடுப்பில் வந்து மீண்டும் சிறைக்குச் செல்லாமல் சுமார் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர் மேலும் சில இடங்களிலும் அரசு மதுபானக் கடையில் சுவற்றில் துளையிட்டு திருடியதும் தெரிந்தது. இதனைத் தொடர்ந்து இவரை வாலாஜாபாத் போலீஸார் கைது செய்தனர்.