6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தின் 4 பேர் கழுத்தறுத்து கொலை


ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 6 மாத குழந்தை உட்பட 4 பேரை கழுத்தறுத்து கொன்ற கும்பல், அவர்களது வீட்டுக்கும் தீ வைத்துச் சென்றிருக்கிறது.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் சாராய் கிராமத்தில் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விவசாயி பூனாராம், அவரது மனைவி, மருமகள் மற்றும் 6 மாத பேரக் குழந்தை என நான்கு உயிர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருக்கின்றன.

பூனாராம் மகன் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருந்த நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் 6 மாத குழந்தை உட்பட 4 பேரையும் கழுத்தறுத்து கொன்றுள்ளனர். பின்னர் வீட்டு முற்றத்தில் சடலங்கள் அனைத்தையும் குவித்து எரியூட்ட முயன்றிருக்கின்றனர்.

அதிகாலையில் பற்றியெரியும் வீட்டால் அக்கம்பக்கத்தில் உள்ளோருக்கு விபரீதம் தெரிய வந்தது. ஊர் பொதுமக்கள் அங்கே குவிந்து தீயை அணைக்க முயன்றனர். அதன் பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். 6 மாத குழந்தை முற்றிலுமாக எரிந்த சூழலில், ஏனைய 3 சடலங்கள் பகுதியளவு எரிந்து கிடந்தன.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே கோணத்தில் அவர்களின் விசாரணை தொடர்ந்து வருகிறது. 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தின் 4 பேர்களை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x