பெங்களூரு மாநகரை குண்டுவெடிப்பில் உருக்குலைக்க சதி? ஆயுதங்கள் பறிமுதல்; 5 பேர் கைது


கைது செய்யப்பட்டவர்கள்

பெங்களூரு மாநகரில் குண்டு வெடிப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் நேற்றைய பெங்களூரு சந்திப்பை முன்னிட்டு, மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது கிடைத்த துப்பு ஒன்றின் பின்னணியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஆராய்ந்ததில், பெங்களூரு மாநகருக்கு குறிவைக்கப்பட்ட சதித்திட்டம் வெளிப்பட்டது. மேலும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட 5 நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

சயீத் சுஹேல், உமர், ஜானித், முதாசிர், ஜாகித் என 5 நபர்களை ஆர்டி நகரின் அருகே போலீஸார் கைது செய்தனர். இந்த 5 நபர்களும் ஒன்றாக சந்தித்த இடத்தை போலீஸார் வளைத்ததில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த 5 நபர்களும் 2017-ம் ஆண்டின் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கே தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சிலருடன் கிடைத்த தொடர்பினை அடுத்து, 5 பேரும் சிறைக்குள்ளாகவே சதித் திட்டம் ஒன்றினை தீட்டியுள்ளனர்.

அதன்படி, சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் தங்கள் திட்டத்துக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில், 5 பேரின் சந்திப்பு நிகழ்வில் அவர்கள் வசமிருந்த 7 கள்ளத்துப்பாக்கிகள், 42 துப்பாக்கி குண்டுகள், 2 செல்போன்கள் மற்றும் ஏராளமான சிம் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்களின் பின்னணி, அவர்களின் சதித் திட்டம், தொடர்புடைய இதர நபர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x