சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கடத்தி தாக்குதல்: சாத்தூர் அருகே 5 பேர் கைது


சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி கடத்திச்சென்று தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் தாய் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தாயில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (21). சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படித்து வரும் கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் (51)-அய்யம்மாள் (47) ஆகியோரின் மகள் கிருஷ்ணவேணி (19) இருவரும் காதலித்து கடந்த ஜூலை 25ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், சிவகாசியில் வாடகைக்கு தனி வீடு எடுத்து இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணவேணியின் தாத்தா நேற்று அவருக்கு போன் செய்து தனக்கு உடல்நிலை சரியில்லாமல் சிவகாசி பேருந்து நிலையத்தில் படுத்திருப்பதாகவும் தன்னை பார்க்க வருமாறும் அழைத்துள்ளார்.

அவரைக் காண பழனிச்சாமியும் கிருஷ்ணவேணியும் சென்றுள்ளனர். பின்னர், அவரை தங்களது பைக்கில் ஏற்றிக்கொண்டு பேரநாயக்கன்பட்டியில் இறக்கிவிட்டுள்ளனர். அப்போது, அங்கு காரில்வந்த கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள், மாமா ஜெயக்குமார் (51) மற்றும் 3 பேர் பழனிச்சாமியையும் கிருஷ்ணவேணியையும் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, அனைத்து செக்போஸ்ட்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாங்குளம் பகுதியில் இளம் தம்பதிகள் இருவரையும் இறக்கிவிட்டு கடுமையாக அவர்களைத் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். பின்னர், அங்குவந்த போலீஸார் இருவரையும் விசாரித்து பாதுகாப்போடு வெம்பக்கோட்டை காவல் நிலையம் அழைத்துவந்தனர்.

இதற்கிடையே, காரில் தப்பிச்சென்ற கிருஷ்ணவேணியின் தாய் அய்யம்மாள் உள்ளிட்ட 5 பேரையும் திருவெங்கடம் அருகே போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் 5 பேரும் இன்று வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து அய்யம்மாள், ஜெயக்குமார் மற்றும் அவர்களுடன் சென்ற உறவினர்கள் மணிகண்டன் (22), சிவசுடலை (24), வேல்முருகன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

x