நாகத்தை ஏவி தொழிலதிபரை கொன்றதாக அவரது தோழி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலைவிரித்திருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம் தீன்பானி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த கார் ஒன்றில் அன்கித் சௌகான் என்ற தொழிலதிபர் சடலமாக மீட்கப்பட்டார். கார் அணைக்கப்படாது உறுமிக்கொண்டிருக்க, உள்ளே உயிரற்று கிடந்தார் சௌகான். அவர் மது வாடை வீசியதால், இறுக மூடிய காருக்குள் போதையில் மூச்சடைத்து இறந்திருக்கலாம் என்றும் சந்தேக மரணத்தின் கீழ் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.
ஆனால் போஸ்ட்மார்டம் அறிக்கையில் பாம்பு விஷம் உடலில் பாரித்ததில் சௌகான் செத்திருப்பதாக சொன்னது. அதிலும் காலில் இல்லாது உடலின் வெவ்வேறு இடங்களில் பாம்புக் கடி தடயங்கள் இருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, சௌகானின் செல்போனை ஆய்வு செய்தவர்கள், கடந்த சில தினங்களின் அவரது அதிகப்படி அழைப்புகளை ஆராய்ந்தனர். அப்படி மஹி என்ற பெண்ணின் அழைப்பு அதிகம் இருக்க, அந்த பெண் தனது செல்போன் வாயிலாக மேற்கொண்ட அழைப்புகளை போலீஸார் துழாவி எடுத்தனர்.
மஹி மேற்கொண்ட அப்படியான அழைப்புகளில் ஒன்று உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரமேஷ் நாத் என்ற பாம்பாட்டி எனத் தெரிய வந்ததும் போலீஸாருக்கு சகலமும் புரிந்தது. உத்திரபிரதேசம் விரைந்த உத்தரகண்ட் போலீஸார், ரமேஷ் நாத்தை அள்ளிவந்து முறைப்படி விசாரித்தனர். இதில் சௌகான் கொலையான பின்னணி விவரங்கள் அனைத்தும் வெளி வந்தது.
தொழிலதிபர் அன்கித் சௌகான் உடன் பழக்கமான பெண் மஹி என்கிற டாலி ஆர்யா. சௌகானிடம் இருந்து பணத்தை கறக்கும் திட்டத்துடன் நெருங்கி பழகிய மஹிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சௌகான் ஏமாறுகிறது ஆள் இல்லை என்பதோடு, குடித்துவிட்டு செக்ஸ் டார்ச்சர் செய்பவன் என்பதால் தடுமாறிப்போனார். எனவே சௌகானை கொல்ல முடிவு செய்தவர், தனது நண்பன் தீப் கன்பால் உடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினார்.
அதன்படி வழக்கம்போல் தன்னிடம் சல்லாபிக்க வந்த சௌகானுக்கு வழக்கமாய் அருந்தும் மதுவில் மஹி மயக்க மருந்து சேர்த்தார். பின்னர் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டிருந்த பாம்பாட்டி ரமேஷ் நாத் உதவியுடன், நாகத்தை சௌகான் உடலில் தீண்டச் செய்தார். பின்னர் சௌகான் இறந்ததை உறுதி செய்துகொண்டு, ஊருக்கு அப்பால் சாலையோரம் காரில் அமரவைத்தவாறு ஜோடித்து விட்டு திரும்பி இருக்கின்றனர்.
தற்போது போலீஸ் வசம் பாம்பாட்டி சிக்கியதை அறிந்ததும், மஹி மற்றும் ஆண் நண்பர், மஹி வீட்டு பணியாளர்கள் 2 பேர் என நால்வரும் தலைமறைவாகி விட்டனர். பாம்பு போல எங்கேயோ பதுங்கியிருக்கும் இந்த நால்வரையும் வளைக்க உத்தரகண்ட் போலீஸ் வலைவிரித்து காத்திருக்கிறது.