கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!


கொலை செய்யப்பட்ட முனியம்மாள்.

வீட்டு வாசலில் தண்ணீர் குடத்தை வைத்ததில் ஏற்பட்ட தகராறில் பெண்ணைக் கட்டையால் அடித்து கொலை செய்த கல்லூரி மாணவி, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் குடம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். கட்டிட வேலை செய்து வரும் இவருக்கு முனியம்மாள்(37) என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அதே குடியிருப்பு வசிக்கும் சாந்தி (38) என்பவர் தண்ணீர் குடத்தைக் கொண்டு வந்து முனியம்மாள் வீட்டு வாசலில் வைத்துள்ளார். அப்போது முனியம்மாள்," எதற்காக எங்க வீட்டு வாசலில் தண்ணீர் குடத்தை வைக்கிறாய்?" என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சாந்திக்கும், முனியம்மாளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி ஆகிய இருவரும் சேர்ந்து முனியம்மாளை கட்டை மற்றும் கையால் அடித்து உதைத்துள்ளனர். இதில் நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்த முனியம்மாளை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதன் பின் சிகிச்சை முடிந்து மறுநாள் வீட்டுக்கு வந்த முனியம்மாளுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதனையடுத்து முனியம்மாளின் கணவர் வெங்கடேசன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாந்தி மற்றும் அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் அவரது மகள் வள்ளி( 20) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு வாசலில் தண்ணீர் குடம் வைத்ததில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x