சென்னை | விலை உயர்ந்த புடவைகளை திருடி விற்ற ஆந்திர பெண்கள் இருவர் கைது


சந்தோஷம், ராமதுளசி

சென்னை: விலை உயர்ந்த புடவைகளை சென்னையில் திருடி ஆந்திராவில் விற்பனை செய்து வந்ததாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டையில் பிரபலமான ஜவுளிக்கடை ஒன்றில் கடந்த 29-ம் தேதி 2 பெண்கள் வந்தனர். சிறிது நேரம் விலை உயர்ந்த புடவைகளைப் பார்த்த அவர்கள் எதுவும் பிடிக்கவில்லை எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த கடை நிர்வாகி, புடவைகளை சரிபார்த்த போது அதில் ஒரு பண்டல் மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகி, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது புடவைகளை வாங்க வந்த பெண்களே திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கடை ஊழியர்கள் வெளியே சென்று தேடிப் பார்த்து, பக்கத்துத் தெருவில் சென்று கொண்டிருந்த அந்த 2பெண்களையும் மடக்கிப் பிடித்து, அவர்களிடமிருந்து புடவை பண்டல்களை கைப்பற்றி, யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் ஆந்திரமாநிலம், திருமலகிரி பகுதியைச் சேர்ந்த நல்லகுண்டா ராமதுளசி (45), ஜெக்கையாபேட்டையைச் சேர்ந்த சந்தோஷம் (42) என்பது தெரிந்தது. அந்த பெண்களை போலீஸார் கைது செய்தனர். இருவரும் சென்னையில் திருட்டில் ஈடுபட்டு அதை ஆந்திராவில் விற்பனை செய்துவந்தது தெரியவந்ததாகப் போலீஸார் தெரி வித்தனர்.

x