சென்னை | துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் எங்கே? - குருவியாக செயல்பட்ட இளைஞர் சித்ரவதை


கோப்புப் படம்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மாயமான நிலையில், குருவியாக செயல்பட்ட இளைஞரை லாட்ஜில் அடைத்து வைத்து 4 மாதங்களாக சித்ரவதை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் வருகபலை கிராமத்தைச்சேர்ந்த சாஜி மோன் (32) என்பவரைகடந்த 4 மாதங்களாக திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து இருப்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சாஜி மோனை மீட்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ்தரப்பில் தெரிவித்ததாவது: சாஜி மோன் துபாயில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். ரம்ஜான் நேரத்தில் சரியான வேலை இல்லாததால் துபாயில் பழக்கமான பென்னி, மாலிக் ஆகியோரிடம் வேறு வேலை கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர்கள் குருவியாக வேலை செய்ய ஆசைவார்த்தை கூறி சாஜி மோனை சம்மதிக்க வைத்துள்ளனர். இதன்படி 4 மாதங்களுக்கு முன்பு துபாயி லிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 3 தங்க கட்டிகளை ஆசனவாய் வழியாக உடலில் மறைத்து வைத்து சென்னை விமான நிலையம் கொண்டு வந்திருக்கிறார்.

அவரிடம் தங்கக் கட்டிகளை வாங்க வந்த 4 பேர், அவரை சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துவந்துள்ளனர். ஆனால் சாஜி மோனிடம் தங்கம் இல்லை. அவரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘உங்கள் பெயரைச் சொல்லி மற்றொரு கும்பல் வாங்கி சென்றுவிட்டதாகவும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை கடுமையாக இருந்ததால் விமான நிலைய கழிப்பறையில் வைத்துவிட்டதாகவும்’ மாறி மாறி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கடந்த 4 மாதங்களாக லாட்ஜில் அடைத்து வைத்துஅடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சேப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிப் பயஸ், அண்ணா சாலை முகமது ஆலிம் ஆப்கான், ஒடிசாவைச் சேர்ந்த வருந்தரதாஸ், மதுரையைச் சேர்ந்த கோபிகண்ணன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள லாட்ஜ் உரிமையாளர் இம்ரானை தேடி வருகின்றனர்.

x