கோவை: கோவையில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன், டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (ஆக.30) ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல்துறை உயரதிகாரிகளுடன் டிஜிபி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.30) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமை வகித்தார். மேற்கு மண்டல காவல்துறை ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களான கார்த்திகேயன் (கோவை), அபிஷேக் குப்தா (திருப்பூர்), ஜவஹர் (ஈரோடு), நிஷா (நீலகிரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் இரவு 8.30 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குறறச் சம்பவங்கள் தடுப்பு, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள், எல்லையோர சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இக்கூட்டம் தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, “வழக்கமான ஆய்வுப் பணிகளை டிஜிபி மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீதான கைது நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்த அவர், நிலுவை வழக்குகளில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யவும், சாலை போக்குவரத்து விபத்துகள் தடுப்பது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நாளை (ஆக.31) காலை காவல்துறையினரிடம் மனுக்கள் பெறும் முகாம் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. அதிலும், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொள்கிறார்” என்றனர்.