தமிழகத்திலிருந்து கடத்த முயன்ற 1,576 கிலோ பீடி இலைகள்: பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை


புத்தளம் கடற்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூடைகள்.

ராமேசுவரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,628 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை இலங்கை கடற்படையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று பாக் ஜலசந்தி நெடுந்தீவு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளை மீட்ட இலங்கை கடற்படையினர், அவற்றை கரைக்கு கொண்டு வந்தனர். அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது அதில் 534 கிலோ பீடி இலைகள் இருந்துள்ளன.

இதேபோல் இன்று மன்னார் வளைகுடா புத்தகளம் கடற்பகுதியில் மூன்று படகுகளை பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினர் அதில் இருந்த 33 சாக்கு மூடைகளில் 1,042 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். இத்தோடு சேர்த்து கடந்த இரண்டு வாரத்தில் இலங்கை கடற்படையினர் சுமார் 7,500 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

x