கரூர்: குளித்தலை டீக்கடையில் இளைஞர் ஒருவர் வாங்கிச் சாப்பிட்ட பருப்பு வடையில் செத்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பந்தப்பட்ட டீக்கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை மற்றும் பலகாரக் கடை நடத்தி வருகிறார். குளித்தலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் எலெக்ட்ரீஷியன் கார்த்தி (33). இவர் பாபு கடையில் இன்று மதியம் 12 மணிக்கு ஒரு போண்டா மற்றும் ஒரு பருப்பு வடை வாங்கியுள்ளார். அதில் பருப்பு வடையை பாதி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது வடையில் உயிரிழந்த நிலையில் சிறிய எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கடை உரிமையாளர் பாபுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு பாபு, “சின்ன எலி தான் ஒன்றும் செய்யாது” என அலட்சியமாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, பாபுவிடம் ஆவேசமாக வாக்குவாதம் செய்துள்ளார். அப்போதும் பாபு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதையடுத்து கார்த்தி இச்சம்பவம் குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அது வைரலாக பரவியதை அடுத்து குளித்தலை நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையின் வெளியே பலகாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஷோ கேஸ் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும், கார்த்தி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.