மதுரை: மதுரையில் நகைக்கடைக்காரர் ஒருவர் அனுமதியில்லாமல் வீட்டில் வைத்திருந்த இரண்டு யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் நகைக்கடை பஜாரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக நகை வியாபாரம் செய்து வருகின்றனர். இவரது வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இன்றி இந்த தந்தங்களை அவர் வைத்திருந்தாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மதுரை மாநகர வன உயிரின சரக ரேஞ்சர் அருணாச்சலம் மற்றும் வனத் துறையினர் வெங்கடேஷ்வரன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இருந்து அந்த இரண்டு யானை தந்தங்களை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை ரேஞ்சர் அருணாச்சலம் கூறுகையில்,"யானை தந்தத்தை, முறையான ஆவணங்களை வைத்து ஆண்டுதோறும் அதைப் புதுப்பித்து வந்தால் வீட்டில் வைத்திருப்பதில் தவறில்லை. அந்தக் காலத்தில் இந்த நடைமுறையைப் பின்பற்றிதான் யானை தந்தத்தை வீட்டில் அலங்காரத்திற்காக வைத்திருந்தார்கள். தற்போது ஆவணங்கள் இல்லாமல் யானை தந்தம் வைத்திருந்தால் அது சட்டவிரோதம்.
நகை வியாபாரி வெங்கடேஷ்வரன் சிறு வயதாக இருக்கும்போது, அவரது தந்தைக்கு அந்த காலத்தில் அவர்களது தொழிலாளர்கள் சேர்ந்து யானைத் தந்தங்களை பரிசாக வழங்கியுள்ளனர். அப்போது அவர் அதற்கான ஆவணத்தை வைத்திருந்ததாகவும், அதனை தற்போது அவர் தொலைத்துவிட்டதாகவும் கூறினார். ஆவணம் இல்லாமல் வைத்திருந்ததால் வன உயிரினச் சட்டப்படி தவறு என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று ரேஞ்சர் அருணாச்சலம் கூறினார்.
இந்தச் சம்பவம், கடந்த 8 மாதத்திற்கு முன்பாக நடந்துள்ள நிலையில், தற்போது வெளியில் தெரிந்து பரபரப்பாக பேசப்படுவது ஏன் என்று தெரியாமல் வனத்துறையினர் குழம்பி போய் உள்ளனர். ஆனால், அதற்கான பின்னணி தகவலும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக யானை தந்தங்களை ஆவணங்கள் இல்லாமல் வீட்டில் வைத்திருந்தால் வனத்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த வெங்கடேஷ்வரன், அதனை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.
அப்போது பறவைகளை விற்பனை செய்யும் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த அவரது உறவினர் ஒருவர், யானை தந்தங்களை விற்க ஏற்பாடு செய்தாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கும், வெங்கடேஷ்வரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. யானை தந்தங்களை விற்க வியாபாரிகளிடம் பேரம் பேசும்போதுதான் இந்த தகவல், வனத்துறைக்கு தெரியவந்து அவர்கள் விசாரணைக்கு சென்றுள்ளனர்.
சென்ற இடத்தில் யானை தந்தத்தை பறிமுதல் செய்ததோடு, அனுமதியில்லாமல் வெளிநாட்டு பறவையை விற்ற வெங்கடேஷ்வரனின் உறவினருக்கு அபராதமும் விதித்துள்ளனர். ஆனால், யானை தந்தத்தை விற்க நடந்த முயற்சியை இந்த வழக்கில் சேர்க்காமல் வெறும் ஆவணம் இல்லாமல் யானை தந்தத்தை வைத்திருந்ததாக மட்டும் வனத்துறை வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.