சிரித்த முகத்துக்கு மாற விரும்பிய மாப்பிள்ளை... உயிரைப் பறித்தது ஹைதராபாத் அறுவை சிகிச்சை


லக்ஷ்மி நாராயண விஞ்சம்

புன்னகை மேம்பாடு என்ற பெயரில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் ஹைதராபாத் புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

28 வயதான லக்ஷ்மி நாராயண விஞ்சம், மார்ச் மாதம் தனது திருமண ஏற்பாட்டுக்காக தயாராகி வந்தார். அதன் பொருட்டு பெரியவர்கள் ஏற்பாட்டில் கடந்த வாரம் நிச்சயதார்த்தமும் முடித்திருந்தார். இந்நிலையில் நண்பர்கள் சிலர் பரிந்துரைத்ததனன் அடிப்படையில் புன்னகை மேம்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

புன்னகை மேம்பாடு சிகிச்சை

முகம் இன்னும் கொஞ்சம் சிரித்தபடி இருந்திருப்பின் நன்றாக இருக்கும் என்று லஷ்மி நாராயணனிடம் ஏற்கனவே பலர் குறிப்பிட்டு இருந்ததில், கல்யாண நாளுக்கு முன்பாக முகத்தில் புன்னகை வசீகரத்தை கூட்ட வழி என்ன எனத் தேடினார். ஹைதராபாத்தின் முன்னணி பல் மருத்துவமனை ஒன்று, புன்னகை அதிகரிப்புக்கான விசேஷ சிகிச்சை அளிப்பதாக அறிந்து அங்கே சென்று விசாரித்தார்.

பின்னர் பிப்ரவரி 16 அன்று ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள ’எஃப்.எம்.எஸ் சர்வதேச பல் மருத்துவமனை’யில் 'ஸ்மைல் டிசைனிங்' அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் 2 மணி நேரத்துக்கு தொடர்ந்த அறுவைசிகிச்சை செயல்முறையின்போது அவர் பரிதாபமாக இறந்தார். பெற்றோர் உட்பட எவரிடமும் லஷ்மி நாராயணன் தெரிவிக்காது அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் பின்னர் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அறுவை சிகிச்சை - மாதிரி படம்

அறுவைசிகிச்சைக்கான மயக்க மருந்தினை அதிகம் கொடுத்ததே மகன் லஷ்மி நாராயணன் சாகக் காரணம் என்றும், முன்னதாக மகனுக்கு எந்த உடல்நலக் குறைவும் இருந்ததில்லை என்றும் அவரது தந்தை ராமுலு விஞ்சம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவ ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய ஹைதராபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக அறுவைசிகிச்சையில் அலட்சியம் காட்டியதாக மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x