இறந்த தந்தையின் உடலை வேறு குடும்பத்துக்கு மாற்றி கொடுத்ததால் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு


சென்னை: திருவாரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காரைக்காலில் தங்கிதினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார். அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்துக்கு கடந்த மாதம் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து ராஜேந்திரனின் உடலைப் பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் காரைக்கால் மருத்துவமனைக்கு சென்றபோது, ராஜேந்திரனின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தனது தந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரியும் ராஜேந்திரனின் மகன் ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறந்த ராஜேந்திரனின் உடலை தவறுதலாக ஒரு மாதத்துக்கு முன்பாக சேலத்தை சேர்ந்த குடும்பத்திடம் மாற்றி ஒப்படைத்து விட்டதாகவும், அவர்களும் ராஜேந்திரன் உடலை அடக்கம் செய்து விட்டதாகவும், அந்த உடலை தோண்டியெடுத்து மீண்டும் மனுதாரர் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

x