கோவை ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.1.63 கோடி மோசடி!


கோவை: ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் சாலை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் விவேக் (43). சாப்ட்வேர் டெவலப்பரான இவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரிடம் அளித்த புகாரில், ‘‘கடந்த மே மாதம் எனது வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட ஒருவர் ஆன்லைன் பங்கு வர்த்தகத் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறினார்.

இதை நம்பி, அவர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பத் தொடங்கினேன். 29 தவணைகளில் ரூ.1 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரத்தை அனுப்பினேன். ஆனால், எனக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை.

மேலும், நான் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப எடுக்க முடியவில்லை. அதன் பின்னரே, நான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸார் அடையாளம் தெரியாத நபர் மீது மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x