சென்னையில் காவல் நிலையத்தில் இருந்து காவலர் உடையை திருடிச் சென்ற வாலிபர், அதை அணிந்து கொண்டு வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பில் இன்று அதிகாலை விருகம்பாக்கம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் திருப்பித் தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.. ஆனால் போலீஸார் வாகனத்தை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் திடீரென காவல் நிலையம் பக்கத்தில் உள்ள காவலர் ஓய்வு அறைக்கு சென்று அங்கிருந்த காவலர் சீருடை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றார். பின்னர் ரெட்டி தெரு அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு காவலர் உடையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை வழிமறித்து பணம் கேட்டு வசூலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த வாகனம் ஓட்டிகள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் விருகம்பாக்கம் பாண்டியன் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் (29) என்பதும் காவல் நிலையத்தில் இருந்து காவலர் உடையை திருடிச் சென்று வசூலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர். மேலும் குபேந்திரன் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் போலீஸில் சிக்கிய வாலிபர் காவல் நிலையத்தில் காவலர் ஓய்வு அறையில் இருந்த சீருடையை திருடிச் சென்று வசூலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!