புகார் அளித்தவரின் நகைகளை அபகரித்ததாக திருமங்கலம் பெண் காவல் ஆய்வாளர் கைது


மதுரை: குடும்பப் பிரச்சினை புகாரில் மனைவியிடம் ஒப்படைக்கும்படி கணவர் கொடுத்த நகைகளை அபகரித்ததாக திருமங்கலம் பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். மென் பொறியாளரான இவர் பெங்களூருவில் வேலை பார்க்கிறார். இவருக்கும், இவரது மனைவி அபிநயாவுக்கும் இடையில் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக அபிநயா திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கீதா இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இவ்விசாரணையில், திருமணத்தின் போது தனக்கு பெற்றோர் வீட்டில் இருந்து வழங்கிய சீர்வரிசை மற்றும் 100 பவுனுக்கு அதிகமான தங்க நகைகளை ராஜேஷ் மனைவி திருப்பிக் கேட்டுள்ளார்.

அவற்றைக் திருப்பி கொடுத்துவிடுவதாக தெரிவித்த ராஜேஷ், மனைவிக்கு சொந்தமான சுமார் 100 பவுன் நகைகளை காவல் ஆய்வாளர் கீதாவிடம் ஒப்படைத்து, மனைவியிடம் முறையாக வழங்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். இருப்பினும், அந்த நகைகளை காவல் ஆய்வாளர் கீதா அபிநயாவிடம் கொடுக்காமல் தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இது பற்றி தெரிந்து கொண்ட ராஜேஷின் தந்தை ரவி, ஆய்வாளர் கீதாவுக்கு எதிராக கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் விசாரித்தனர். காவல் ஆய்வாளர் நகைகளை அபகரித்தது உண்மை என தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் வழக்கில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், நகைகளை திருப்பி ஒப்படைத்தாக ஆய்வாளர் கீதா தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒரு பகுதி நகைகளை திருப்பிக் கொடுத்த அவர், 38 பவுன் நகைகளை மட்டும் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில், ஆய்வாளர் கீதா மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. அபகரித்த நகைகளை திருப்பி கொடுக்காத நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர் கீதாவின் கணவரும் மதுரை காவல் துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

x