“பசிக்காக திருடினேன்... அதையே எனது தொழிலாக மாற்றிவிட்டனர்” - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய இளைஞர்


திருநெல்வேலி: "பசிக்காக திருடிய என்னை கொள்ளைக்காரனாகவே மாற்றிவிட்டார்கள். தற்போது திருந்தி வாழ்வது பிடிக்கவில்லையா, மீண்டும் பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயினை அறுக்க வேண்டுமா?” என்று கூச்சலிட்ட இளைஞரால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (38). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது போடப்பட்ட வழக்கு ஒன்றில் வாய்தாவுக்கு ஆஜராகும் படி நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்ற சம்மன் நகலோடு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று அவர் ஆட்டோவில் வந்தார். அப்போது அவரது கையில் ரத்தக் காயம் இருந்தது.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அருண்குமாரை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, “தேவையில்லாமல் என்னை இந்த வழக்கில் சேர்த்து எனது வாழ்க்கையை சீரழித்து விட்டார்கள்” என்று கதறியபடி அருண்குமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் சமாதானம் ஆகாத அருண்குமார், திடீரென தான் அணிந்திருந்த சட்டையை கழட்டி வீசி எறிந்துவிட்டு கூச்சலிட தொடங்கினார். “உளவுத்துறை போலீஸார் தான் தனது வாழ்க்கையை சீரழித்து விட்டனர்” என்று அவர் கத்தினார்.

காலையில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வேலைக்கு வரும் நேரத்தில் அருண்குமார் இப்படிப் போராடியது போலீஸாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகளும் அருண் குமாரை சமாதானப்படுத்தினர்.

ஆனாலும் அவர் சமாதானம் ஆகாமல், “தேவையில்லாமல் என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளார்கள். இந்த வழக்கில் உள்ள பிற குற்றவாளிகள் கூலிப்படையை சேர்ந்தவர்கள். அவர்களுடன் நான் எப்படி நீதிமன்றத்தில் ஆஜராக முடியும்? பசிக்காக திருட ஆரம்பித்தேன். பின்னர் அதையே தனது தொழிலாக மாற்றி விட்டார்கள். தற்போது 2 ஆண்டுகளாக திருந்தி வாழ்கிறேன். ஆனால் இடையூறு செய்கிறார்கள்.

மீண்டும் நான் பெண்களின் கழுத்தில் கிடக்கும் செயினை அறுக்கவா, பணத்தை திருடவா, போலீசாரை அலைய விடவா?” என கண்ணீருடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அவர், “எனது வாழ்க்கை நாசமாகிவிட்டது. எனக்கும் குடும்பத்தோடு வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. 38 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. என்னை வாழ விடுங்கள். நான் ஒரு அனாதை” என்று கதறி அழுதார்.

பின்னர் அவரை போலீஸார் அங்கிருந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காலை நேரத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அருண்குமார் செய்த இந்த ஆர்ப்பாட்ட ரகளையால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

x