டாஸ்மாக் பணியாளருக்கு அரிவாள் வெட்டு: நடவடிக்கைக் கோரி ஊழியர்கள் கோரிக்கை மனு


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே டாஸ்மாக் ஊழியரை சரமாரியாக வெட்டி பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி நடந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாஸ்மாக் ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து துரித நடவடிக்கைக் கோரி டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆட்சியர், எஸ்.பி அலுவலகத்தில் கோரிக்கை மனுகொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையின் மேற்பார்வையாளராக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். இவர் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவரிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சியில் மர்மக் கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டு விழுந்ததோடு, கைவிரலும் துண்டிக்கப்பட்டது. அவரின் தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆனாலும் விடாமுயற்சியுடன் போராடி அவர் ஆறரை லட்ச ரூபாயை காப்பாற்றினார்.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். தொடர்ந்து எஸ்.பி அலுவலகத்திலும் அவர்கள் புகார் கொடுத்தனர்.

x