அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் பிளஸ்2 மாணவன் உயிரிழப்பு; யுனானி மருத்துவர் கைது


நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்

சென்னையில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட பள்ளி மாணவன் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் மகன் உயிரிழந்ததாக பெற்றோர் புகாரில் யுனானி மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(43). இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை. சீனிவாசன் தனியார் நிறுவனத்தின் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அஸ்வந்த் (17) தி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6ம் தேதி மாணவன் அஸ்வந்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அஸ்வந்தை பரிசோதித்த மருத்துவர் ஷேக் முகமது முபின் மாணவருக்கு காய்ச்சல் ஊசி போட்டுவிட்டு தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு ஊசி வந்து போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்

இதனை தொடர்ந்து அஸ்வந்தை அவரது பெற்றோர் இரண்டு நாட்கள் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இடுப்பில் ஊசி போட்டுள்ளனர்.

9ம் தேதி திடீரென அஸ்வந்துக்கு ஊசி போட்ட இடத்தில் கருப்பாக பரவியதை (அழுகிய நிலையில்) பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்போது அஸ்வந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதின் பேரில் பெற்றோர் அஸ்வந்தை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு இருமுறை அஸ்வந்துக்கு ஊசி போட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யும் போது அஸ்வந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகன் அஸ்வந்த் உடலை திருவண்ணாமலைக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். இதனை தொடர்ந்து அஸ்வந்தின் தந்தை சீனிவாசன் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் இறந்துவிட்டதாகவும் சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை கூடுதல் மருத்துவ சேவை இயக்குநர் டாக்டர் விஸ்வநாதன் மற்றும் டாக்டர் இளங்கோவன், இணை இயக்குநர் டாக்டர் கண்ணம்மா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழு அதிகாரிகள் நேற்று நலம் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வில் சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் வசிக்கும் யுனானி மருத்துவர் சேக் முகமது முபின்(40) அண்ணா யுனானி மருத்துவக் கல்லூரியில் யுனானி மருத்துவம் படித்துவிட்டு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தது தெரியவந்தது.

மேலும் மருத்துவர் ஷேக் முகமது தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி கடந்த 6ம்தேதி காய்ச்சலுக்கு வந்த அஸ்வந்துக்கு பாராசிட்டமல் ஊசியை பரிந்துரைத்ததன் பேரில் செவிலியர் அனிப் நிஷா அஸ்வந்துக்கு ஊசி செலுத்தி உள்ளார். பின்னர் அஸ்வந்த்துக்கு ஊசி செலுத்திய இடம் அழுகி உடல் முழுவதும் பரவ தொடங்கியது தெரியவந்தது. இதனால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வந்த்துக்கு மருத்துவர்கள் அழுகிய இடத்தை இருமுறை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்த போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது.

புழல் சிறை

மேலும் ஆங்கில மருந்துகளை ஆயுஷ் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது ஆயுஷ் கவுன்சில் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர் சேக் முகமதின் தவறான சிகிச்சையாலும் கவனக்குறைவாலும் மாணவன் அஸ்வந்த் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குமரன் போலீஸார் யுனானி மருத்துவர் ஷேக் முகமது முபின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு சென்ற பள்ளி மாணவன் மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x