வெளிமாநிலம், வெளிநாட்டினரின் குற்றப் பின்னணியை அறிய உதவும் ‘ஸ்மாக்’ தொழில்நுட்பம்!


மதுரை: பெரும்பாலும் தனிநபருக்கு எதிராக, சொத்துகள் தொடர்பாகவும் அரசுக்கு எதிராகவும் என்ற அடிப்படையிலேயே குற்றச்செயல்கள் நடக்கின்றன. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் இதுபோன்ற குற்றச்செயல்கள் காவல்துறையால் வகைப்படுத்தி ஆவணப் படுத்தப்படுகின்றன. இதற்கான விவரங்களை மாவட்டம், மாநகர, மாநில குற்றப்பதிவேடு கூடங்களில் பணிபுரியும் காவல் துறையினர் சேகரிக்கின்றனர்.

இது தவிர, தேசிய அளவிலும் குற்றப்பதிவேடு பிரிவும் செயல்படுகின்றது. இவற்றின் மூலமே பழைய குற்றவாளிகள், குற்றத்தன்மை, குற்றச் சரித்திர பட்டியலில் (ரவுடி) இடம் பெறுவோரின் குற்றப்பின்னணி விவரங்களும் அந்தந்த காவல் நிலையங்கள் மூலம் சேகரித்து பராமரிக்கப்படுகிறது. இப்புள்ளி விவரங்கள் ஒவ்வொரு பகுதியிலும் குற்றத்தடுப்பை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

இருப்பினும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் குற்றச் செயல் புரிந்தவர்கள், அங்கிருந்து தப்பிவந்து தமிழக பகுதியில் குற்றம் புரியும்போது, அவர்களின் குற்றப்பின்னணி விவரங்களை கண்டறிய புதிய தொழில் நுட்பமானது மதுரை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் பணி நடக்கிறது.

இது குறித்து மதுரை மத்திய புலனாய்வு பிரிவினர் கூறுகையில், “காவல்துறையின் நவீனமயமாக்கலில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சி.சி.டி.என்.எஸ் (க்ரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் ) மற்றும் மாவட்ட, மத்திய குற்றப்பதிவேடு கூடங்கள் மூலம், தினமும் நடக்கும் குற்றச்செயல்கள், எஃப்ஐஆர் உள்ளிட்ட விவரங்கள் வகைப்படுத்தி சேகரித்து ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இவை, மாநில குற்றப்பதிவேடு பிரிவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் குற்றச் செயல்புரிவோரின் விவரங்கள் கண்டறியப்படுகின்றன.

இதன் வாயிலாக மாநில அளவில் குற்றம்புரிவோரின் விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வெளி மாநில, வெளி நாடுகளைச் சேர்ந்த குற்றப் பின்னணியினர் தமிழக பகுதியில் வந்து குற்றம் புரியும்போது, அவர்கள் குறித்த விவரங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. கஞ்சா, போதைப் பொருள், சைபர் குற்றம் புரியும் வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவரின் குற்றப் பின்னணி விவரங்களை அறியும் விதமாக ‘ஸ்மாக்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை மாவட்ட வாரியாக ஏற்படுத்த மத்திய புலனாய்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் குற்றம்புரியும் நிலையில், அவர்கள் பின்னணியை அறிய நேரிடும் போது, பெயர் அல்லது ஆதார் உள்ளிட்ட ஓரிரு தகவலை புதிய தொழில்நுட்ப உபகரணத்தில் உள்ளீடு (பதிவு ) செய்து துரிதமாக அறியலாம். இது தொடர் நடவடிக்கைக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்புதிய தொழில் நுட்பம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது" என்று மத்திய புலனாய்வு பிரிவினர் கூறினர்.

x