விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டுமனையை அளக்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தச்சரான இவர் சில மாதங்களுக்கு முன் கண்டாச்சிபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தெருவில் 2004 சதுர அடி வீட்டு மனையை கிரையம் பெற்றுள்ளார். இந்நிலத்தை அளந்து கொடுக்க அரசு விதிமுறைகளின்படி விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக பலமுறை கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் சர்வே பிரிவில் பணியாற்றும் சர்வேயர் ராம மூர்த்தியை சந்தித்து நில அளவு சம்பந்தமாக பேசியுள்ளார்.
அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இறுதியாக ரூ.4,500 தந்தால் வேலையை முடித்துத் தருவதாகக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று மாலை போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.4,500 ரொக்கத்தை கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் ராம மூர்த்தியிடம் சுரேஷ் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் டிஎஸ்பி (பொறுப்பு) வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சர்வேயர் ராமமூர்த்தியை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து தற்போது ராமமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.