’திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்ததின் அடிப்படையில் நடைபெறும் இருதரப்புக்கும் இசைவான பாலுறவு, பிற்பாடு திருமணம் நடக்காது போனால் பலாத்காரத்தில் சேர்ந்துவிடுமா’ என்பது குறித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ஆண் ஒருவருக்கு எதிராக, அவருடன் நட்பாக பழகி ஏமாந்ததாக, பெண் ஒருவர் தொடுத்த வழக்கில் ஒரிசா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக ஆண் வாக்களித்ததன் அடிப்படையில், இருவரும் மனமொத்து பலமுறை பாலுறவு கொண்டிருக்கின்றனர். ஆனால், எதிர்பாரா காரணங்களினால் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற வாய்ப்பில்லாது போனது. இதனை அப்போதைக்கு அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், பின்னர் அந்த ஆணுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற பெண், ’திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக’ வழக்கு தொடுத்தார். மேலும், தன்னிடமிருந்த பணரீதியாக ஆண் மோசடி செய்ததாகவும் பெண் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுக்கு ஆளான ஆணை பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து விடுவித்து ஒரிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்ததன் அடிப்படையில் மனமொத்து நிகழும் பாலுறவு, பிற்பாடு எதிர்பாரா காரணங்களினால் திருமணம் நடக்க இயலாது போவதால், பாலியல் பலாத்காரமாக மாறிவிடாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, இந்த தீர்ப்பினை நீதிபதி ஆர்.கே.பட்நாயக் வழங்கினார். பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து ஆணை விடுவித்தபோதும், அவர் மீதான மோசடி மற்றும் ஏமாற்றிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கைத் தொடர பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.