மனைவியை கொன்ற வழக்கில் பால் வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை @ புதுச்சேரி


புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியைக் கொன்ற வழக்கில் பால் வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி முத்திரையர்பாளையம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பாபு என்ற பரந்தாமன் (58). பால் வியாபாரியான இவரது மனைவி ரதிகலா (45). குடும்பப் பிரச்சினை காரணமாக பாபு என்ற பரந்தாமனுக்கும் அவரது மனைவி ரதிகலாவுக்கும் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்துள்ளது. 2001ம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் அப்படி கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த பாபு என்ற பரந்தாமன் கோபத்தில் அருகிலிருந்த கிரைண்டர் கல்லால் மனைவி ரதிகலாவை தாக்கினா. அதில் பலத்த காயமடைந்த ரதிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபு என்ற பரந்தாமனை கைது செய்தனர்.

இது தொடர்பான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ரவீந்திரன் வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பாபு என்ற பரந்தாமனுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.1000 அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி டி.சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

x