ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, விபத்து தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக ரயில்வே ஊழியர்கள் மூவரை கைது செய்துள்ளது.
ஜூன் 2 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் விபத்துக்கு ஆளானதில், 294 பயணிகள் உயிரிழந்தனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகை உலுக்கிய இந்த விபத்தின் பின்னணியை ஆராய, மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ களமிறங்கியது.
கோரமண்டல் ரயிலுக்கு வழங்கப்பட்ட தவறான வழிகாட்டுதல் காரணமாகவே சரக்கு ரயிலுடனான அதன் மோதல் நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தவறான வயரிங் அடிப்படையிலான சிக்னல் செயல்பாடு காரணமாக, பிரதான ரயில் தடத்தை தவித்து, சரக்கு ரயில் நின்று கொண்டிருக்கும் இணைப்பு ரயில் தண்டவாளத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் திருப்பிவிடப்பட்டது.
சரக்கு ரயிலுடனான கோரமண்டலின் மோதலால் அதன் ரயில் பெட்டிகள் தடம்புரண்டு அருகிலுள்ள ரயில் தண்டவாளங்களை குறுக்கிட்டது. இதனால், அவ்வழியாக விரைந்த அடுத்த பயணிகள் ரயிலும் விபத்துக்கு ஆளானது. இதனால் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை வெகுவாய் கூடியது.
இதற்கிடையே, தவறான வழிகாட்டுதல் மற்றும் சிக்னல் வயரிங்க் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயன்றதாக, ரயில்வே துறையில் பணியாற்றும் மூவரை சிபிஐ கைது செய்துள்ளது. பொறியாளர்களான அருண்குமார் மகந்தா, முகமது அமீர்கான் மற்றும் டெக்னீசியன் பப்பு குமார் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையை தொடர்ந்து வரும் சிபிஐ அதிகாரிகள், வேறு எவருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரித்து வருகிறது.