செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கத்தில் மாமியாரை கொன்ற மருமகனுக்கு எதிரான வழக்கில், மகிளா நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி கீதா என்கிற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. மதுவுக்கு அடிமையான ஆறுமுகம் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவி கீதாவிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 5 அன்றும் இதே போன்று குடித்துவிட்டு வந்த ஆறுமுகத்தால் குடும்பத்தில் சண்டை வெடித்தது. சண்டையின் முடிவில் கணவன் இனி திருந்தப்போவதில்லை என்ற வேதனையில், மனைவி கீதா காஞ்சி காமாட்சி நகரில் உள்ள தனது தாய் சித்ராவின் வீட்டுக்கு கிளம்பினார்.
மனைவியை பின்தொடர்ந்து மாமியார் வீட்டுக்கு விரைந்து வந்த ஆறுமுகம், அங்கு கீதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியார் சித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஆறுமுகத்திற்கும் மாமியார் சித்ராவிற்கும் இடையிலான வார்த்தைப் பிரயேகம் வலுத்தது.
இதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்தை ஆறுமுகம் அறுக்கத் தொடங்கினார். ஆறுமுகத்தை தடுக்க முயன்ற மைத்துனர் உதயகுமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. அந்தப் போராட்டத்தில் போதை மருமகனின் கத்திக்கு, பேதை மாமியார் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் அறிவியல் பூர்வமாக உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ20 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். கொலைச்சம்பவம் நிகழ்ந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே, கொலை குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது செங்கல்பட்டில் பேசுபொருளாகி இருக்கிறது.