குடியாத்தம்: குடியாத்தத்தில் போலி பெண் மருத்துவரின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, உயிரிழந்த பெண்ணின் உடல் மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சேதுபதியின் மனைவி பிரியங்கா (24). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரியங்காவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அதே பகுதியில்உள்ள பிரியா என்பவரது கிளீனிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். பின்னர், குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை மயானத்தில் பிரியங்காவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிரியங்கா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக டாக்டர் பாபு என்பவர் ஆய்வு செய்ததில் மருத்துவமனைக்கும் வரும் முன்பே பிரியங்கா தவறான சிகிச்சையால் நோய் தீவிரமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்த பிறகு உயிரிழந்ததை உறுதி செய்தார்.
மேலும், அரசு மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் பரவிவரும் தவறான செய்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் டாக்டர் பாபு புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த குடியாத்தம் நகர காவல் துறையினர் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் பிரியங்கா சிகிச்சை பெற்ற கிளீனிக்கில் மருத்துவ துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அந்த கிளீனிக் நடத்தி வந்த பிரியா என்பவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் செவிலியர் படிப்பை மட்டும் முடித்துவிட்டு, மருத்துவரை போல் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததை கண்டுபிடித்தனர்.
அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகள் மற்றும் சிரஞ்சிகளையும் பறிமுதல் செய்தனர். பிரியங்கா உயிரிழப்பை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் மருத்துவர் பிரியாவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக குடியாத்தம் சுண்ணாம்புப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிரியங்காவின் உடலை வருவாய் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுத்து அங்கேயே மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். வழக்கு விசாரணைக்காக பிரியங்காவின் உள் உறுப்புகள் மற்றும் எலும்பு மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளனர்.