வட்டாட்சியரை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரியை விடுவித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு!


முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வெள்ளலூர், அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், ஒளிப்பதிவாளருடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தன்னை அடித்து உதைத்ததாக வட்டாட்சியர் காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி

கடந்த 9ம் தேதி இந்த வழக்கின் கேள்வி விசாரணைக்காக மு.க.அழகிரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி ரபீக் அறிவித்திருந்தார். இதன்படி இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட நிலையில், இதற்காக குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரும் வந்திருந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 17 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, இந்த வழக்கில் மு.க.அழகிரி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்த வட்டாட்சியர் காளிமுத்து, அழகிரி தரப்பினர் தாக்கவில்லை எனவும் செருப்பு அணிந்து கோயிலுக்குள் சென்றதால் அங்கு இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் மட்டுமே நிகழ்ந்ததாகவும், நீதிமன்றத்தில் பிறழ்சாட்சி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

x